கூடங்குளம் அருகே பைக் மீது வேன் மோதியதில் 2 தலையாரிகள் உடல் நசுங்கி பலியாகினர்.
நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்தவர் அருள்லிங்கம் (48). இவர் கூடங்குளத்தில் தலையாரியாக வேலை பார்த்து வந்தார். இவரும், செட்டிகுளத்தில் தலையாரியாக பணிபுரியும் திசையன்விளை அருகே புலிமான்குளத்தை சேர்ந்த வேல் என்பவரும் நேற்று காலை பைக்கில் உவரியில் இருந்து கூடங்குளத்திற்கு கடற்கரை சாலை வழியாக சென்றனர். கூடங்குளம் அருகே சென்ற போது மின்னல் வேகத்தில் பின்னால் வந்த வேன் பைக் மீது மோதி அங்குள்ள பள்ளத்தில் பாய்ந்து தடுப்பு வேலியில் மோதி நின்றது. பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட அருள்லிங்கம், வேல் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விபத்துக்கு காரணமான வேன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜெட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான இருவரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலை மறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் 2 தலையாரிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
நன்றி: தினகரன்
