Breaking News

திசையன்விளை அருகே கிராமத்தில் புகுந்தது சிறுத்தை அல்ல, கிரேடன் ரக நாய் : வனத்துறையினரின் புது ‘கரடியால்’ மக்கள் குழப்பம்

திசையன்விளை: திசையன்விளை அருகே கிராமத்தில் புகுந்தது சிறுத்தை அல்ல, கிரேடன் ரக நாய் என்று வனத்துறையினர் திசை திருப்புவதால் பொதுமக்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர். திசையன்விளை அருகே வாகைநேரியில் கடந்த 1ம் தேதி அதிகாலை விவசாயி மலையாண்டி என்பவரது தொழுவத்துக்கு குட்டியுடன் சிறுத்தை வந்தது. அங்கிருந்து அந்த சிறுத்தை ரோட்டை கடந்து செல்லும் போது அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் பார்த்ததாக கூறினார்.

மறுநாள் கருப்பசாமியின் மாமியார் பேச்சியம்மாள் மாடுகளுக்கு தீவனம் வைக்க செல்லும் போது சிறுத்தை அவரை பார்த்து உறுமியதால் பயந்து அருகில் உள்ள செல்லம்மாள் என்பவரை உதவிக்கு அழைத்து வந்தார். சிறுத்தையை பார்த்து அவரும் பயந்து அலறியடித்து ஓடினார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தை திருச்செந்தூர் வனச்சரகர் லோகசுந்தரநாதன் பார்வையிட்டு 90 சதவீதம் சிறுத்தையின் காலடி தடம் தான் என்பதை உறுதி செய்தார். ஆனால், அங்கு பொருத்தப்பட்டிருந்த கேமராவில் எவ்வித உருவமும் சிக்கவில்லை.

இந்நிலையில் மலையாண்டி வீட்டின் மாட்டுத் தொழுவத்திலும், தடுப்பணை அருகிலும் 2 கூண்டுகளை வைத்து அதற்குள் இரைக்காக நாய்களை வனத்துறையினர் கட்டிப்போட்டனர். இதில் நேற்று வரை எந்த விலங்கும் சிக்கவில்லை. நேற்று முன்தினம் சம்பவ இடத்தை நெல்லை மாவட்ட வன அலுவலர் ராஜூ பார்வையிட்டு, ‘வாகைநேரி கிராமத்தில் பதிவானது உயர் ரக நாயின் காலடி தடமாக இருக்கலாம்’ என்றார். இதற்கிடையில் விஜய அச்சம்பாட்டை சேர்ந்த வெள்ளத்துரை மகன் அலெக்ஸ் என்பவர் தான் வளர்த்து வந்த கிரேடன் ரக நாயை கடந்த 27ம் தேதி முதல் காணவில்லை என்று கூறினார். வனக்காப்பாளர் ரத்தினம், சஜீந்திரன் ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று காணாமல் போன நாயின் புகைப்படம் மற்றும் அதன் விபரங்களை பெற்றனர்.

தற்போது அந்த நாய் இட்டமொழி அருகே உள்ள துவரம்பாட்டில் நடமாடி வருவதாக கிடைத்த தகவலையடுத்து வனக்காவலர்கள் அங்கு சென்று அதன் காலடி தடங்களை ஆய்வு செய்தனர். இதுகுறித்து வனக்காவலர் ரத்தினம் கூறுகையில், ‘அலெக்சிடமிருந்து பெற்ற நாயின் புகைப்படத்தை பார்த்தோம். கருப்பு நிறத்தில் சுமார் 5 அரை அடி உயரம் உள்ள அந்த நாய் சுற்றித்திரிவதாக கூறப்படும் துவரம்பாட்டில் சென்று பார்த்தோம். அதன் காலடி தடம் தெளிவாக கிடைக்கவில்லை. மாட்டுத் தொழுவத்திற்கு வந்தது சிறுத்தையா? அல்லது கிரேடன் வகை நாயா? என்பது தெரியும் வரை எங்கள் தேடுதல் தொடரும்’ என்றார்.

தெளிவுபடுத்த வேண்டும்

இதுகுறித்து இட்டமொழி பஞ். கவுன்சிலர் அருள்மாணிக்கம் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயஅச்சம்பாட்டை சேர்ந்த பரமசிவன் என்பவர் தோட்டத்திற்கு சென்ற போது மோட்டார் அறையின் மேல் நின்ற சிறுத்தை அவர் மீது பாய்ந்து காதை கடித்ததுடன், உடலின் பல்வேறு பகுதிகளில் நகத்தால் கீறி விட்டு தப்பி சென்றது. ஆனால் இன்று வரை அந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்கவில்லை. தற்போது துவரம்பாட்டில் பள்ளி மாணவன் உட்பட 5 பேர் தாங்கள் சிறுத்தையை குட்டியுடன் பார்த்தோம் என்று கூறிய பிறகும், அது உயர் ரக நாயாக இருக்கலாம் என்று உதாசீனப்படுத்துவது சரியல்ல.

எனவே வனத்துறை உயர் அதிகாரிகள் உயிர்பலி ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும்’ என்றார்.
சிறுத்தையை பார்த்ததாக கூறியவர்கள் அதன் உருவம் செவலை கலரில் இருந்ததாகவும் குட்டியுடன் நடமாடியதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், காணாமல் போன நாய் கருப்பு கலரில் உள்ளது. எனவே, கிராமத்தில் புகுந்தது நாயா? அல்லது சிறுத்தையா? என்பதை தெளிவுபடுத்தும் வரையில் தேடுதல் வேட்டையை தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினத்தந்தி

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply