திசையன்விளை பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையத்தில் 12–ந் தேதி
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தரைவழி இணைப்புகள் பெற்று துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக, மறு இணைப்பு மேளா வரும் 3–ந்தேதி தொடங்கி, 19–ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ப.முருகானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
மறு இணைப்பு மேளா
பி.எஸ்.என்.எல். தரைவழி இணைப்புகளில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை நாட்டின் எந்த ஒரு பகுதியில் உள்ள தரைவழி இணைப்பு மற்றும் அனைத்து மொபைல்களுக்கும் முற்றிலும் இலவசமாக பேசும் புதிய திட்டம் மே 1–ந் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தின் தரைவழி இணைப்புகள் ஏற்கனவே பெற்று தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள் மீண்டும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்து, புதிய சலுகையை பயன்படுத்தி கொள்ளும் வகையில் ‘மறு இணைப்பு மேளா’ நடத்தப்பட உள்ளது.
இந்த மேளா, சங்கரன்கோவில் தொலைபேசி நிலையத்தில் 3–ந் தேதியும், நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பொதுமேலாளர் அலுவலகத்தில் 4–ந் தேதியும், வள்ளியூர் தொலைபேசி நலையத்தில் 5–ந் தேதியும், தென்காசி தொலைபேசி நிலையத்தில் 7–ந் தேதியும், அம்பாசமுத்திரத்தில் 8–ந் தேதியும், களக்காடு தொலைபேசி நிலையத்தில் 9–ந் தேதியும், நெல்லை ஸ்ரீபுரம் தொலைபேசி நிலையத்தில் 10–ந் தேதியும், புளியங்குடி தொலைபேசி நிலையத்தில் 11–ந் தேதியும், திசையன்விளை தொலைபேசி நிலையத்தில் 12–ந் தேதியும், சேரன்மாதேவி தொலைபேசி நிலையத்தில் 14–ந் தேதியும், கடையநல்லூர் தொலைபேசி நிலையத்தில் 15–ந் தேதியும், நாங்குநேரி தொலைபேசி நிலையத்தில் 16–ந் தேதியும், சங்கர்நகர் தொலைபேசி நிலையத்தில் 18–ந் தேதியும், வடக்கன்குளம் தொலைபேசி நிலையத்தில் 19–ந் தேதியும் நடைபெறும்.
அமைப்பு கட்டணம் ரத்து
தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக துண்டிக்கப்பட்ட தொலைபேசியில் வைப்புத் தொகை கழிக்கப்பட்ட பின், வரும் பாக்கித் தொகையில் சலுகைகளில் பொருத்தமான முறையில் தள்ளுபடி பெற்று மறு இணைப்பு பெறுவதற்கோ அல்லது பாக்கித் தொகையைச் செலுத்தி கணக்கை முடித்து கொள்வதற்கோ இந்த மேளாக்களில் பங்கேற்று பயனடையலாம்.
மறு இணைப்பு பெறும் போது, அமைப்புக் கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. தொலைபேசி வேலை செய்யாத காலத்திற்கான வாடகைக் கட்டணமும் ரத்து செய்யப்படும். தேவைப்படின், தவணை முறையில் செலுத்தும் வசதி செய்து தரப்படும். மறு இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு இலவச சிம் வழங்கப்படும். புதிய இணைப்புகள் மற்றும் மறு இணைப்புகளுக்கு ரூ.630 மதிப்புள்ள தொலைபேசி கருவி ரூ.315 மட்டும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
புதிய சிம், புதிய தரைவழி இணைப்புகள் மற்றும் மறு இணைப்புகள் பெற புகைப்படம் மற்றும் முகவரி, அடையாளச் சான்றுடன் மேளாவில் பங்கேற்க வேண்டும்.
பில் பிரச்னைக்கு தீர்வு
பில் மற்றும் சேவை தொடர்பாக புகார்கள் இருந்தால் மேளாவில் உடனுக்குடன் தீர்வு காணப்படும். பாக்கி தொகையை செலுத்தி கணக்கை முடித்து கொள்ளலாம். அவ்வாறு செய்யத் தவறினால், பாக்கி தொகையை வசூலிப்பதற்கு சட்டபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ப.முருகானந்தம் தெரிவித்து உள்ளார்.
நன்றி: தினத்தந்தி
