திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, நேற்று மஞ்சள்பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
மஞ்சள்பெட்டி ஊர்வலம்
திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா கடந்த 23–ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. விளையாட்டு போட்டிகள், கோலப் போட்டிகள், சமய சொற்பொழிவு, பல்சுவை கலை போட்டிகள், இன்னிசை கச்சேரி, நாடகம், மாங்கல்ய பூஜை, குத்துவிளக்கு பூஜை, வில்லிசை, சமையல் போட்டி, ஓவிய போட்டி, அன்னதானம், கணினி போட்டி உட்பட் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று மதியம் மன்னராஜா கோவிலில் இருந்து யானை முன் செல்ல, மேள தாளங்களுடன் மஞ்சள் பெட்டி ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக மஞ்சள் பெட்டி கோவிலை சென்றடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.
மஞ்சள் நீராடுதல்
பின்னர், கோவிலில் சாமிக்கு மஞ்சள் நீராடுதல் நடைபெற்றது. இரவு கோவிலை சுற்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி குங்குமம் பாஸ்கர், ஆனந்த வினாயகர், மன்னராஜா, சுடலை ஆண்டவர் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இன்று(சனிக்கிழமை) காலை கோவிலில் உணவு எடுத்தல் நடக்கிறது.
நன்றி: தினத்தந்தி
