மணல் லாரி மோதி பள்ளி மாணவன் சாவு: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தாங்கை கைலாசபுரத்தைச் சேர்ந்தவர் ஜெயமுருகன். இவரது மனைவி தெய்வகனி. இவர்களது மகன்கள் லெட்சுமணன்(11), ராமு(10), மகள் காத்திகா(8). ஜெயமுருகன் சென்னையில் உள்ள கடையில் வேலை பார்க்கிறார். குழந்தைகள் தெய்வக்கனியின் பராமரிப்பில் உள்ளனர்.லெட்சுமணன் உடன்குடி தேரியூர் ராமகிருஷ்ண சிதம்பரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் 6ம்வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சைக்கிளில் புறப்பட்டார்.
தாங்கை பண்டாபுரம் விலக்கில் வரும் போது எதிரே வேகமாக வந்த மணல் லாரி சைக்கிள் மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.இதுபற்றி அறிந்த அவரது தாய் தெய்வக்கனி மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டு கதறி துடித்தனர். குலசேகரன்பட்டினம் போலீசார் அங்கு வந்து ரோட்டில் கூழாகி கிடந்த லெட்சுமணனின் உடலை தூக்கி தென்னங்கீற்றில் கிடத்தி போலீஸ் வாகனத்தில் ஏற்றி பரிசோதனைக்கு கொண்டு சென்றார்.
ஆத்திரமடைந்த மாணவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்து நடந்த சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாணவனின் தாய் தெய்வக்கனியுடன் நூற்றுக்கணக்கானோர் அங்கு அமர்ந்து மறியல் செய்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து திருச்செந்தூர் டிஎஸ்பி கோபால் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். உடன்குடி பகுதிக்குள் மணல் லாரிகள் செல்ல தடை விதிக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிடப்பட்டது. மறியலால் சுமார் நான்கு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை
தொடர்ந்து நேற்று காலையில் திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. தாசில்தார் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மணல் லாரியின் உரிமையாளர், விபத்துக்குள்ளான மாணவனின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு தருவதாக கூறினார். மேலும் பள்ளிக்கூடம் காலையில் தொடங்கும் நேரம், மாலையில் முடிவடையும் நேரங்களில் கனரக வாகனங்கள் உடன்குடி நகருக்குள் செல்லாமல், மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அடக்கம்
மாலையில் இறந்த லட்சுமணனின் உடலை குடும்பத்தினர் பெற்று சென்று, ஜெயமுருகனின் சொந்த ஊரான தட்டார்மடம் அருகே உள்ள அரசூர் பூச்சிக்காட்டில் அடக்கம் செய்தனர்.
விபத்து ஏற்படுத்திய மணல் லாரி டிரைவர் கைது
இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய மணல் லாரி டிரைவரான நெல்லை மாவட்டம் திசையன்விளை மணலிவிளை தெருவைச் சேர்ந்த சுயம்புலிங்கம் (23) என்பவர் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது வழக்கு
லாரி மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் அனுமதியின்றி சாலைமறியலில் ஈடுபட்டதாக அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞர் அணி செயலாளர் அய்யப்பன், ஆம் ஆத்மி கட்சி ஒன்றிய அமைப்பாளர் குணசீலன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஆசாத், மக்கள் நலன் காக்கும் இயக்க மாநில தலைவர் முகைதீன் உள்பட சுமார் 100 பேர் மீது குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நன்றி: தமிழ்முரசு
