ஜூலை 14, 2015
ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலை செடிகள் மட்டுமே அகற்றப்பட்டு வருகிறது. இன்னும் மணல் அள்ளப்படவில்லை என்று தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் மனு கொடுத்து உள்ளார்.
குறைதீர்க்கும் நாள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் ம.ரவிகுமார் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி சப்–கலெக்டர் கோபாலசுந்தரராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் கலெக்டரிடம் அளித்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் அணை வடகால் மூலம் 12 ஆயிரத்து 800 ஏக்கரும், தென்கால் மூலம் 12 ஆயிரத்து 767 ஏக்கர் பரப்பும் சாகுபடி செய்யப்படுகிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு 8 தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த அணை 142 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்தது. பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் தற்போது தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை அமலை செடிகளை அகற்றும் பணி மட்டும்தான் நடக்கிறது. மணல் அள்ளும் பணி இன்னும் தொடங்கவில்லை. எந்தவித அரசாணையும் இல்லாமல் பொதுப்பணித்துறை பொய்யாக தூர்வாருவது விவசாயிகளையும், பொதுமக்களையும் ஏமாற்றும் செயல் ஆகும். ஆகையால் மாவட்ட கலெக்டர் முழு விவரத்துடன் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறி உள்ளார்.
கூடுதல் கட்டணம்
தூத்துக்குடி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் நாகம்பட்டி மனோ கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஓட்டப்பிடாரம் தாலுகா நாகம்பட்டியில் மனோ கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கிறார்கள். எனவே அரசு கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்ப தர வேண்டும். பல்கலைக்கழகத்துக்கு தெரியாமல் அதிக கட்டணம் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவர்கள் நலன் கருதி கல்லூரியை உடனடியாக திறக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க கூடாது என்று கூறி உள்ளனர்.
கருகும் நெற்பயிர்
தென்திருப்பேரை நகர பஞ்சாயத்து தலைவர் ராமஜெயம் மற்றும் கடம்பாகுள பாசன விவசாயிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தாமிரபரணி தென்கால் பாசனத்தில் பிரதான குளமாக கடம்பாகுளம் உள்ளது. இந்த குளத்தில் நெல் நடவு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 30 நாட்களில் நெல் அறுவடைக்கு தயாராகி விடும். இந்த நிலையில் தென்கால் வாய்க்காலில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் நெற்பயிர்கள் கருகும் நிலை உருவாகி உள்ளது. ஆகையால் வாடும் நெற்பயிர்களை காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் ஸ்ரீவைகுண்டம் அணை தூர்வாரும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் எக்காரணம் கொண்டும் தனியார்களின் தலையீடு இல்லாமல் முழுவதும் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்குமாறு செய்ய வேண்டும். இதற்காக ஸ்ரீவைகுண்டம் அணை தென்கால், வடகால் பாசன விவசாய தலைவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற தலைவர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும். இந்த குழு மாவட்ட கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.
இந்து முன்னணி
திருச்செந்தூர் அருகே கச்சனாவிளையை சேர்ந்த சாந்தி மற்றும் இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் இந்து முன்னணியினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கச்சனாவிளை சிற்றூராட்சியில் கடந்த 4 மாதமாக வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இணைப்புகளுக்கு ரூ.4 ஆயிரம் பெற்றுக் கொண்டு சட்டவிரோதமாக வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பெ.சக்திவேலன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சாத்தான்குளம் அருகே பொத்தக்காலன் விளையில் உள்ள பள்ளியில் படிக்கும் இந்து மாணவிகள் தலையில் பூ வைக்க கூடாது, பொட்டு, வளையல், கொலுசு அணியக்கூடாது என்று நிர்வாகம் மிரட்டி வருகிறது. ஆகையால் மாணவிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
நண்டு கம்பெனி
வேம்பார் சிலுவைபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 60 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் பனை தொழில் மற்றும் கூலிவேலை செய்து மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் எங்கள் கிராமத்தில் நண்டு பதப்படுத்தும் கம்பெனி எந்தவித அனுமதியும் பெறாமல் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழல் மிகவும் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி அந்த பகுதி மக்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வருகிறது. கம்பெனியில் இரந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக நிலத்தடி நீருடன் கலந்து வருகிறது. இதனால் கிணற்றில் உள்ள நீர் பாதிப்படைந்து உள்ளது. ஆகையால் நண்டு கம்பெனியை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
சிமெண்டு கற்கள்
கடம்பூர் பேரூராட்சி 8, 9–வது வார்டு மக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த நிலம் மீட்கப்பட்டு உள்ளது. நாங்கள் நடைபாதையின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். ஆகையால் எங்கள் குடியிருப்பின் கிழக்கு பகுதியில் சுமார் 8 அடி அகலத்துக்கு பொது நடைபாதையில் சிமெண்ட் தள கற்கள் அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நன்றி: தினத்தந்தி
