ஆசிரியையுடனான தொடர்பால் அமைச்சர் சண்முகநாதன் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் மீதான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றக் கோரியும் தாக்கலான வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.
சாத்தான்குளம் தட்டார்மடம் இன்பராஜ் தாக்கல் செய்த மனு: பள்ளி ஆசிரியராக உள்ளேன். என் மனைவியாக இருந்தவர் லீமா ரோஸ் பள்ளி ஆசிரியை. சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன், லீமா ரோஸ் இடையே தொடர்பு ஏற்பட்டது. விவாகரத்து பெற்றேன்.என் சொத்தில் லீமா ரோஸூக்குரிய பங்கை அவரது பெயரில் எழுதி வைக்காவிடில் கொலை செய்து விடுவோம் என அமைச்சர் தரப்பில் மிரட்டினர். வழக்குப் பதிவு செய்ய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.:2014 டிச.,8 ல் அரசு வழக்கறிஞர் ”மனுதாரர் புகாரில் உண்மை இல்லை என போலீசார் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்” என்றார். வழக்கை முடித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சாத்தான்குளம் போலீசார் எனக்கு டிச., 6 தேதியிட்டு டிச.,9 ல் ஆஜராக சம்மன் அனுப்பினர். டிச.,8 ல் உயர்நீதிமன்ற விசாரணையின் போது, நான் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை; புகாரில் முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை டிச.,7 ல் முடித்ததாக நீதிமன்றத்திற்கு போலீசார் தவறான தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்று தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். தனி நீதிபதி, ”ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. மனுதாரர் புகார் மீதான விசாரணையை முடித்து விட்டதாக தெரிவித்த போலீசாரின் முந்தைய அறிக்கை ரத்து செய்யப்படுகிறது. புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும்,” என டிச.,19 ல் உத்தரவிட்டார்.என்னை நிர்பந்தித்து ஒருதலைபட்சமாக இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணையை முடிக்கப் பார்க்கிறார். விசாரணையை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.காந்தி ஆஜராயினர்.
நீதிபதி: இன்ஸ்பெக்டர் மீண்டும் விசாரித்து புகாரில் உண்மை இல்லை என வழக்கை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். மனுதாரர் கீழமை நீதிமன்றத்தில் மனு செய்து பரிகாரம் தேடலாம். மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.
நன்றி: தினமலர்
