வியாழன் , சித்திரை 25 2024
Breaking News

கிராம நிர்வாக அலுவலர்கள் மடிக்கணினிகளை ஒப்படைக்கும் போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
தமிழக வருவாய்த் துறையில் சாதிச்சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்கள் உள்ளிட்டவை மின்னணு முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அதன்பின்பு 2014 ஆம் ஆண்டு முதல் சான்றிதழ்கள் பரிந்துரைகளை ஏற்பது, விசாரித்து அடுத்த அலுவலருக்கு பரிந்துரைப்பதை கணினி மூலம் செய்து வருகிறார்கள். தொடக்கத்தில் இணையதள பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட ரூ.200 நிறுத்தப்பட்டதோடு, மின்னணு முறையில் கேளாறுகளும் சரி செய்யப்படாததால் கிராம நிர்வாக அலுவலர்கள் தவித்து வந்தனர். இதற்கிடையே இ-அடங்கல் பணியையும் செய்ய அரசால் உத்தரவுப்பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டனர். பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு கிளைச் செயலர் ஜெயராமனும், திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு செந்தில்முருகனும் தலைமை வகித்தனர். பாளையங்கோட்டை-26, திருநெல்வேலி-9, மானூர்-9, திருவேங்கடம்-26, சங்கரன்கோவில்-39, தென்காசி-19, ஆலங்குளம்-27, கடையநல்லூர்-28, வீ.கே.புதூர்-22, செங்கோட்டை-17, சிவகிரி-21, அம்பாசமுத்திரம்-38, சேரன்மகாதேவி-32, நான்குனேரி-8, ராதாபுரம்-25, திசையன்விளை-13 என மொத்தம் 359 மடிக்கணினிகள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கூறியது: பழைய மாடல் மடிக்கணினிகளால் பணிகளை முடிக்க முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையை மாற்றக்கோரி ஒப்படைக்கும் போராட்டத்திலும், தற்செயல் விடுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளோம். அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், இம் மாதம் 8 ஆம் தேதி கூடுதல் பொறுப்பு கிராமக் கணக்குகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்திலும், 12 ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு முழுநேர பெருந்திரள் தர்னாவிலும், 24 ஆம் தேதி மாநில பொதுக்குழுவைக் கூட்டி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

நன்றி  : தினமணி  

About Eesu

Check Also

தமிழகத்தில் 4 அருங்காட்சியகங்கள் உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்

திருநெல்வேலி, திருச்சி உள்பட 4 இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களை ரூ. 12 கோடி மதிப்பில் உலகத் தரத்துக்கு உயர்த்த …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன