Breaking News

திசையன்விளையில் கண்ணாடி பாட்டிலால் முதியவர் அடித்துக் கொலை வாலிபர் கைது

திசையன்விளை,

திசையன்விளையில் கண்ணாடி பாட்டிலால் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

முதியவர்
நெல்லை மாவட்டம் திசையன்விளை நாடார் தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 73). அவருடைய மகன் கோபாலகிருஷ்ணன். இவர் திசையன்விளை பஸ்நிலையம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். தினமும் மதிய வேளையில் சாப்பாட்டுக்காக மகனை வீட்டுக்கு அனுப்பி விட்டு, நடராஜன் கடையில் அமர்ந்து இருப்பது வழக்கம். அதுபோல் நேற்று மதியமும் கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றுவிட்டார். கடையில் நடராஜன் இருந்தார்.

அப்போது திசையன்விளை அருகே உள்ள முருகேசபுரத்தை சேர்ந்த மணிமோகன் மகன் தீபன்ராஜ் (29) என்பவர் அங்கு குடிபோதையில் வந்துள்ளார். நடராஜனிடம் 100 ரூபாய் நோட்டை கொடுத்து சிகரெட் பாக்கெட் கேட்டுள்ளார். அவரும் சிகரெட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை 10 ரூபாய் நோட்டுகளாக கொடுத்தாராம். இதனை அவர் வாங்க மறுத்து நடராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கண்ணாடி பாட்டிலால் அடித்துக் கொலை
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த தீபன்ராஜ், கடையில் இருந்த காலி குளிர்பான கண்ணாடி பாட்டிலை எடுத்து நடராஜனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கடைக்கு வெளியே வந்து ரோட்டில் விழுந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது, நடராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி திசையன்விளை போலீசில் கோபாலகிருஷ்ணன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தீபன்ராஜை கைது செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி : தினத்தந்தி  

About Eesu

Check Also

உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.

நெல்லை, உவரியில் படகு இறங்குதளம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுதிமொழி குழுவிடம் மீனவர்கள் வலியுறுத்தினர். கப்பல் மாதா ஆலயம் …

மறுமொழியொன்றை இடுங்கள்