செவ்வாய், ஜூன் 30,2015
வேறொரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய கணவர் முயற்சித்ததால், கணவர் வீட்டு முன்பு பட்டதாரி பெண் தனது கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டம் நடத்தினார்.
கணவன்–மனைவி
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆர்.சி.நந்தன்குளத்தைச் சேர்ந்தவர், அந்தோணி ராயப்பன். அவருடைய மகன் அந்தோணி அமலன் (வயது 34).
தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டை அருகே உள்ள சின்னராணிபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவருடைய மகள் ரோஸ்லின் (25). பட்டதாரி.
அந்தோணி அமலன், ரோஸ்லின் ஆகிய இருவருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்தோணி அமலன் மும்பையில் சினிமா துறையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2½ வயதில் அவனிக் சபியரா என்ற பெண் குழந்தை உள்ளது. அனைவரும் மும்பையில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில், கணவன்–மனைவி மற்றும் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரோஸ்லின், கணவரை விட்டு பிரிந்து, குழந்தையுடன் சின்னராணிபுரத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு வந்துவிட்டார்.
தர்ணா போராட்டம்
இந்தநிலையில், அவருடைய கணவர் அந்தோணி அமலன் வேறு ஒரு பெண்ணை 2–வது திருமணம் செய்ய முயற்சி செய்ததாக ரோஸ்லினுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஸ்லின், தன்னுடைய தந்தை மாணிக்கம் மற்றும் உறவினர்களுடன் ஆர்.சி.நந்தன்குளத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார். ரோஸ்லினை கண்டதும் அவருடைய மாமனார் அந்தோணி ராயப்பன், மாமியார் கீதாராணி ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
கணவருடன் தன்னை சேர்த்து வைக்கும் வரை வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்துவதாக அறிவித்து, ரோஸ்லின் தனது கைக்குழந்தையுடன் போராட்டம் நடத்தி வருகிறார்.
தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், தனிப்படை ஏட்டு பெஸ்ட் குமார் ஆகியோர் விரைந்து வந்தனர். ரோஸ்லினிடம் விசாரணை நடத்தினர்.
நன்றி: தினத்தந்தி
