திசையன்விளை: திசையன்விளை அருகே இன்று அதிகாலை நடத்தை சந்தேகத்தில் இளம்பெண் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கணவர் போலீசில் சரணடைந்தார். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உபகாரமாதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்பால்(37) பந்தல் போடும் தொழிலாளி. இவருக்கும் கரைசுத்துபுதூர் அருகே உள்ள ராஜம்மாள்புரத்தைச் சேர்ந்த முத்துச்சாமி(56) மகள் பொன்இசக்கி(28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரசாந்த்(7) என்ற மகனும், செல்வரோஜா(6) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் சுவிஷேசபுரம் தனியார் பள்ளியில் முறையே 2 மற்றும் 1ம் வகுப்பு படித்து வந்தனர்.
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் சமீபத்தில் புயல் வீச தொடங்கியது. பொன் இசக்கி நடத்தையில் ஜான்பால் சந்தேகப்பட்டதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு ஜான்பால் பந்தல் போடுவதற்காக வெளியே சென்று விட்டார். அதன்பிறகு இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவர் வீடு திரும்பினார். கதவை வெகுநேரம் தட்டியும் மனைவி திறக்காததால் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நீண்டநேரத்திற்கு பிறகு பொன் இசக்கி கதவை திறந்துள்ளார். இவ்வளவு நேரம் உள்ளே என்ன செய்து கொண்டிருந்தாய் என கேட்டவாறு வீட்டிற்குள் சென்று அரிவாளை எடுத்து வந்து சரமாரியாக வெட்டினார்.
இதில் கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்ததால் பொன் இசக்கி ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். அதிகாலை நேரம் என்பதால் குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தனர். இதுபோல் பக்கத்து வீடுகளிலும் யாருக்கும் தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து ஜான்பால் நேராக திசையன்விளை போலீஸ் நிலையம் சென்று சரணைடைந்தார். சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை குறித்து பொன்இசக்கி தந்தை முத்துசாமியும் போலீசில் புகார் செய்தார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
நன்றி: தினகரன்
