தட்டார்மடம் அருகே உள்ள மணி நகரை சேர்ந்தவர் முத்துராமபாண்டியன். இவரது மகன் கண்ணன். இவர் சாத்தான்குளம் ஒன்றிய பா.ம.க. துணை செயலாளராக உள்ளார். இருவரும் மணிநகர் மெயின் பஜாரில் கடை வைத்துள்ளனர்.
மேலும் அவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. அதனை பிச்சி குடியிருப்பை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தனர். குத்தகை காலம் முடிந்ததும் மணிகண்டனிடம் இருந்து மீண்டும் தோட்டத்தை திரும்ப பெற்றனர்.
இந்நிலையில் மணிகண்டன் மீண்டும் தோட்டத்தை குத்தகைக்கு தருமாறு கேட்டுள்ளார். ஆனால் முத்துராமபாண்டியன் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முத்துராமபாண்டியன் கடைக்கு மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர்கள் கண்ணன், ரவி மற்றும் உறவினர் பள்ளக்குறிச்சியை சேர்ந்த சரத்குமார் ஆகியோர் சென்றனர். அவர்கள் முத்துராமபாண்டியனிடம் சிகரெட் கேட்டுள்ளனர். ஆனால் அவர் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து முத்துராமபாண்டியனை சரமாரி தாக்கினர். மேலும் கடையில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராபின்சன் விசாரணை நடத்தி தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றார்.
நன்றி: மாலைமலர்
