Breaking News

உடன்குடி பள்ளி வளாகத்தில் பரிதாபம் பள்ளிக்கூட பஸ் மோதி சிறுமி பலி சாலை மறியல்–வாகனங்கள் உடைப்பு

உடன்குடி

உடன்குடி பள்ளி வளாகத்தில் பரிதாபம் பள்ளிக்கூட பஸ் மோதி சிறுமி பலி

உடன்குடி பள்ளிக்கூட வளாகத்தில், பள்ளிக்கூட பஸ் மோதியதில் 4 வயது சிறுமி பலியானாள். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டு வாகனங்களை உடைத்தனர்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

4 வயது சிறுமி
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள லட்சுமிபுரம் பஞ்சாயத்து மருதூர்கரையைச் சேர்ந்தவர், பட்டாணி செல்வன். இவர் தனது வீட்டின் முன் மளிகை கடை நடத்தி வருகிறார். மீன் வியாபாரமும் செய்து வருகிறார். அவருடைய மனைவி சுடலை கனி.

இவர்களுக்கு துர்க்கா லட்சுமி (வயது 7), நேகா (4) ஆகிய 2 மகள்கள். அவர்கள் உடன்குடியில் ஒரு தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தனர். துர்க்கா லட்சுமி 2–ம் வகுப்பு படிக்கிறாள். நேகா எல்.கே.ஜி. படித்து வந்தாள். இவர்கள் தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்கு, பள்ளிக்கூட பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

பஸ் மோதி பலி
நேற்று காலையில் சுடலைக்கனி தன்னுடைய 2 மகள்களையும் பள்ளிக்கூட பஸ்சில் அனுப்பி வைத்தார். அக்காளும், தங்கையும் பள்ளிக்கூடம் சென்றதும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினர்.

பஸ்சின் டிரைவர் மேலும் சில இடங்களில் இருந்து மாணவர்களை அழைத்து வருவதற்காக மீண்டும் பஸ்சை இயக்கினார். பள்ளி வளாகத்தில் பஸ்சை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பகுதி நேகாவின் முகத்தில் மோதியது.

இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த நேகாவின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. அவள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தாள். உடனடியாக சிறுமி நேகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மறியல்–வாகனங்கள் உடைப்பு
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை விடப்பட்டது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து செல்வதற்காக பள்ளிக்கூடத்தின் முன் குவிந்தனர்.

பள்ளிக்கூட வளாகத்தில், கவனக்குறைவாக பள்ளிக்கூட பஸ்சை ஓட்டி எல்.கே.ஜி. சிறுமி உயிர் இழக்க காரணமாக இருந்த நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள், பெற்றோர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். பள்ளிக்கூட வளாகத்தில் நிறுத்தி இருந்த பள்ளிக்கூட பஸ் மற்றும் காரின் கண்ணாடிகளை கல் வீசி உடைத்தனர்.

அனைத்து பள்ளிக்கூட பஸ்களிலும் குழந்தைகளை அழைத்துச் செல்ல தகுந்த பணியாளர்கள் மற்றும் கண்டக்டர் கட்டாயம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தெ.தியாகராஜன், தாசில்தார் வெங்கடாசலம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கோபால் (திருச்செந்தூர்), கனகராஜ் (சாத்தான்குளம்), நகர பஞ்சாயத்து தலைவி ஆயிஷா கல்லாசி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சிநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து மதியம் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் உடன்குடி– பரமன்குறிச்சி ரோட்டில் சுமார் 2 மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் குலசேகரன்பட்டினம் வழியாக திருப்பி விடப்பட்டன.

டிரைவர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான உடன்குடி அருகே உள்ள பரமன்குறிச்சியைச் சேர்ந்த கர்ணன் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

நன்றி: தினத்தந்தி

மேலும்: மாலைமலர், தினமலர், தினமணி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்