10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 470 மதிப்பெண்கள் பெற்று, குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டவர்களில் மாநில அளவில் 2-வது இடம் பிடித்த திசையன்விளை மாணவி சிவராமலட்சுமியை மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சார்ந்த சிவராமகிருஷ்ணன், ரூபி ஸ்டெல்லா தம்பதியின் மகளான சிவராமலட்சுமி பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். குழந்தை தொழிலாளியாக இருந்த இவர் மீட்கப்பட்டு, திசையன்விளை சிறப்பு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தார். தொடர்ந்து தேசிய குழந்தை தொழிலாளர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திசையன்விளை ஸ்டெல்லா மேரீஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு முதல் படித்து வந்தார்.
இவர், 10-ம் வகுப்பு பொதுத்தேர் வில் 470 மதிப்பெண் பெற்று குழந்தை தொழிலாளியாக இருந்து மீட்கப்பட்டவர்களில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி சிவராமலட்சுமியை ஆட்சியர் மு.கருணாகரன் பாராட்டினார். தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் சந்திரகுமார், களவிளம்பர அலுவலர்கள் ரவீந்திரன், விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவி சிவராமலட்சுமியை பாராட்டி ஆட்சியர் மு.கருணாகரன் கேடயம் வழங்கினார்.
நன்றி : தி இந்து