05, ஜூலை 2015
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அரசின் சாதனை பட்டியலில் சேர்க்கும் வகையில், தாமிரபரணி – -நம்பியாறு இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்; திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு போதுமான நீராதாரங்கள் இல்லை. எனவே, தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கன்னடி யன் அணைக்கட்டை புனரமைத்து, அதன் கால்வாயை, 6.5 கி.மீ., துாரத்திற்கு அகலப்படுத்தப்பட உள்ளது.
இத்துடன், 73 கி.மீ., நீளத்திற்கு வெள்ளநீர் கால்வாய் அமைத்து, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலம், தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளான, பச்சையாறு, கொடுமுடியாறு ஆகியவை இணைக்கப்படும். இந்த நதிகள் இணைப்பு திட்டத்தின் மூலம், மொத்தம், 56 ஆயிரத்து 931 ஏக்கர் நிலங்களின் பாசனம் உறுதி செய்யப்படும். இதில், 42 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் புதிதாக பாசன வசதி பெறும் பகுதிகளாக அமையும்.
இத்திட்டம் நிறைவேறினால், வறண்டு கிடக்கும் சாத்தான்குளம் மற்றும் திசையன்விளை பகுதிகளில், வேளாண் உற்பத்தி அதிகரிக்கும். இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். கிணறுகள், ஆழ்துளை குழாய்களில், நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த இணைப்பு திட்டத்தை, 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு கட்டங்களாக மேற்கொள்ள அரசு திட்டமிட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகள் முடிவடையாமல் இழுத்து வருகிறது. இதற்காக, கடந்த 2011ம் ஆண்டு முதல், 2014ம் ஆண்டு வரை அரசால், 201 கோடி செலவிட திட்டமிடப்பட்டது.
ஆனால், 102 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மட்டுமே, பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில், காவிரி –வைகை இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அ.தி.மு.க., அரசின் ஆட்சிக்காலம் முடிவதற்கு, இன்னும் ஓராண்டுக்கும் குறைவாக உள்ளது. எனவே, தாமிரபரணி இணைப்பு திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தலில், அரசின் சாதனைபட்டியலில், இத்திட்டத்தை இடம் பெற செய்வதற்காக, இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை கருத்தில், கொண்டு, தாமிரபரணி இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க, பொதுப்பணித்துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தாமிரபரணி இணைப்பு திட்டம் சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவது, நிலஎடுப்பு பணிகளால் தாமதமாகி வந்தது. இப்பிரச்னைக்கு அரசு தீர்வு கண்டுள்ளது. எனவே, விரைவில், மூன்று மற்றும் நான்காம் கட்டப்பணிகள் துவங்கும். இந்தாண்டு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு, 253 கோடி ரூபாயை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.
இந்த நிதியில் பணிகள் விரைவுப்படுத்தப்படும். குறைந்தபட்சம், அடுத்தாண்டு ஜன., மாதத்திற்குள் பணிகளை முடிக்கும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்
