திசையன்விளை, மே.15–
திசையன்விளை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் முருங்கை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு பயிரிடப்பட்டுள்ள குரூஸ், அழகி, யாழ்பாணம், செடிரக முருங்கைகாய்கள் அமெரிக்கா, லண்டன், கனடா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சென்ற ஆண்டு ஒரு கிலோ முருங்கைக்காய் அதிகபட்சமாக ரூ.48 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதிகவிலை கிடைக்கும் என கூடுதலாக முருங்கை பயிரிட்டு உள்ளனர். முருங்கைக்காய் அமோக விளைச்சல் காரணமாக சென்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஒரு கிலோ முருங்கைகாய் ரூ.3 முதல் ரூ.4 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பரி கூலி கூட கிடைக்கவில்லை என கூறி முருங்கை காய்களை ஆடு மாடுகளுக்கு இறையாக போட்டனர்.
சில விவசாயிகள் முருங்கைகாய் பரிப்பதை நிறுத்திவிட்டனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கோடை மழை எதிரொலியால் முருங்கை விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. பூவும், பிஞ்சுமாக இருந்த அனைத்து பூக்களும் உதிர்ந்துவிட்டது.
பிஞ்சுகள் பிசிர் அடித்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. காய்கள் நிறம் மாறி உள்ளது. மரங்கள் இலை மஞ்சள் நிறத்தில் உள்ளது. இதன் காரணமாக விளைச்சல் குறைந்துள்ளது. சில இடங்களில் முருங்கை மரங்கள் முழுவதும் இலை உதிர்ந்து காணப்படுகிறது.
முருங்கைகாய் உற்பத்தி குறைவு காரணமாக தற்போது ஏற்றுமதி ரக முருங்கைகாய் அதிகபட்சமாக கிலோ ரூ.35க்கு விற்பனை செய்யப்படுகிறது. கருப்பு ரக முருங்கைகாய்கள் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.
விலை இருந்தும் விளைச்சல் இல்லையே என முருங்கை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
நன்றி:- மாலைமலர்
