ஜூலை 10, 2015
நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த கஸ்தூரி ரெங்கபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி லட்சுமி.
இவர்களின் மகள் சுகன்யா (வயது 23). நர்சிங் படித்துள்ள இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கர்ப்பமாக இருந்த இவரை கடந்த வாரம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அவரது தாய் சேர்த்தார்.
அங்கு கடந்த 7–ந்தேதி சுகன்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. சுக பிரசவத்தில் பிறந்ததால் குழந்தையை ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் பராமரித்து வந்தனர்.
நேற்று மாலையில் அக்குழந்தையை சுகன்யாவின் தாயார் லட்சுமி பிரசவ வார்டில் இருந்து வாங்கிச் சென்றார். அதன் பிறகு மீண்டும் குழந்தையை வார்டுக்கு கொண்டு வரவில்லை. இதனால் பதறிப்போன வார்டு நர்சு இதுபற்றி டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் போலீசுக்கு புகார் கொடுக்க ஆசாரிபள்ளம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதில் சுகன்யாவின் தாய் லட்சுமி, பச்சிளங் குழந்தையுடன் திசையன்விளை சென்றது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இரவோடு இரவாக திசையன்விளை சென்றனர்.
அங்கு லட்சுமியை தேடி கண்டுபிடித்து அவரிடம் சுகன்யாவின் குழந்தை எங்கே? என்று கேட்டனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவரை ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போதுதான் லட்சுமி தனது மகள் சுகன்யாவின் பச்சிளங்குழந்தையை கொன்று புதைத்து விட்டார் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதற்கான காரணம் பற்றி கேட்டபோது, லட்சுமி போலீசாரிடம் கூறியதாவது:–
நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சுகன்யா நர்சாக பணிபுரிந்த போது அந்த பகுதியில் உள்ள 17 வயதே ஆன கட்டிட தொழிலாளி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனர்.
அப்போது எல்லை மீறி நடந்து கொண்டதால் சுகன்யா கர்ப்பமானார். குழந்தை உருவாகி பல மாதங்களுக்கு பிறகே இது எனக்கு தெரிய வந்தது. திருமணம் ஆகாமல் மகள் கர்ப்பமானது ஊருக்கு தெரிந்தால் அவமானம் என்று மனம் வருந்தினேன்.
கருவை கலைத்து விட வழி இருக்கிறதா? என்று டாக்டர்களிடம் கேட்டேன். அவர்கள் கருவை கலைத்தால் சுகன்யா உயிருக்கு ஆபத்து என்று கூறி விட்டனர். எனவே அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு சேர்த்தேன்.
அங்கு குழந்தை பிறந்ததும், வார்டில் இருந்து அதனை நைசாக வெளியே எடுத்துச்சென்றேன். உடனடியாக திசையன்விளை சென்று அங்கு அந்த குழந்தையை கொன்று புதைத்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து போலீசார் லட்சுமியை திசையன் விளைக்கு மீண்டும் அழைத்துச் சென்று அங்கு புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் லட்சுமியின் உறவினர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபோல ஆஸ்பத்திரி வார்டில் இருந்து எந்த தகவலும் இன்றி லட்சுமி குழந்தையை வாங்கிச் சென்ற விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என ஆஸ்பத்திரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
